.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

2013ம் ஆண்டின் நடைப்பெற்ற பேரழிவுகள்!

Unknown | 9:33 PM | 0 comments

ஏப்ரல் 20 

சீனா... தென்மேற்கு பிராந்தியமான சிச்சுவான் மாகாணம்... லூஷான் பகுதி... காலை 8 மணி... பூகம்பம்! 7.0 ரிக்டர் அளவில் பதிவான பூகம்பத்தில் ஒரு கிராமம் முற்றிலுமாக அழிந்து போனது. 193 பேர் பலியானார்கள். 23 பேர் காணாமல் போனார்கள். 15,554 பேர் காயமடைந்தார்கள். இதே சிச்சுவான் பிராந்தியத்தில் 2008ல் ஏற்பட்ட பூகம்பத்திலும் ஆயிரக்கணக்கானோர் இறந்து போனார்கள். 

மே 1

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டது நிலநடுக்கம்... 5.4 ரிக்டர். இந்த நிலநடுக்கத்தில் இரண்டு பேர் பலியானார்கள். பல வீடுகள் நொறுங்கின. சில சாலைகள் பிளந்து கொண்டன. 

ஜூன் 14

இந்த ஆண்டும் உத்தரகண்ட் மாநிலத்தை மழையும் வெள்ளமும் விட்டு வைக்கவில்லை. ஜூன் 17 வரை நீடித்தது. உத்தரகண்டிலும், இமாசலப் பிரதேசத் திலும், உத்தரப்பிரதேசத்திலும் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ள பாதிப்பில் ஜூலை 16 வரை 5,700 பேர் இறந்ததாகக் கருதப்படுகிறது. அடித்துச் செல்லப்பட்ட பலரின் உடல்கள் கிடைக்கவில்லை. இமாசலப் பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனிதத் தலங்களுக்கு சுற்றுலா சென்ற பக்தர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். 70 ஆயிரம் பேருக்கு மேல் திரும்பி வர வழியில்லாமல் தவித்தார்கள். சாலை அழிந்து போயிருந்தது, நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. 3 நாட்களுக்கு மேல் சரியான உணவுகூட இல்லாமல் அவதிப்பட்டார்கள். பிரபல கேதார்நாத் கோயில் அழிவிலிருந்து தப்பித்துவிட்டாலும், அதைச் சுற்றியுள்ள கடைகள், ஓட்டல்கள், விடுதிகள் கிட்டத்தட்ட அழிந்து போயின. ஜூன் 25... வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த எம்.ஐ.17 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 19 பேர் பலியானார்கள். தமிழக பைலட் பிரவீன் என்பவரும் பலியானார்.

ஆகஸ்ட் 5 

அமெரிக்கா... கலிஃபோர்னியாவில் இருக்கும் க்ளீவ்லேண்ட் நேஷனல் ஃபாரஸ்ட்டில் தீ பற்றிக் கொண்டது. அலை போல எழுந்த புகையும் நெருப்பும் வேகமாகப் பரவின. தெற்கு கலிஃபோர்னியாவின் உள்ளடங்கிய பகுதியில், பள்ளத்தாக்கில் வசித்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டுவிட்டு இடம் பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள். சிலருக்கு காயம் ஏற்பட்டது. 

செப்டம்பர் 24 

பாகிஸ்தான் பலுசிஸ்தான் பிராந்தியத்தில் மிக மோசமான பூகம்பம். 7.7 என்ற ரிக்டர் அளவில் பதிவானது. அங்கே ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி, ராஜஸ்தானிலும் உணரப்பட்டது... அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம். இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கிக்கொண்டார்கள். சரியான பாதை இல்லாமல் மீட்புப் பணிகள் தாமதமாகின. லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டார்கள். இறந்து போனவர்கள் 825 பேர்... படுகாயம் அடைந்தவர்கள் 700 பேர்.

செப்டம்பர் 9 

அமெரிக்காவில் உள்ள கொலராடோவில் தெற்கு பிளேட் நதியில் வெள்ளம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்தார்கள். 8 பேர் உயிரிழந்தார்கள்.6 பேர் வெள்ளத்தில் காணாமல் போனார்கள். 


அக்டோபர் 15 

பிலிப்பைன்சை இந்த ஆண்டு இரண்டு இயற்கைச் சீற்றங்கள் ஆட்டம் காண வைத்தன. முதலில் நிலநடுக்கம்... அதிலிருந்து மீண்டு, அந்த நாடு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் புயல்! பிலிப்பைன்சின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் போஹோல் தீவில், கார்மன் நகரில் நிலநடுக்கம் வந்தபோது காலை 8:12 மணி. ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் பதிவானது. 33 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. கட்டிடங்கள் நொறுங்கின, சாலைகள் சேதம் அடைந்தன, பாலங்கள் இடிந்து விழுந்தன. போஹோல் மட்டுமல்லாமல், செபு நகரிலும் கடும் சேதம் ஏற்பட்டது. நிலநடுக்கத்துக்குப் பிறகு சுனாமி வரும் என்ற அச்சம் ஏற்பட்டது. பலர் மலைப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். அன்று செவ்வாய்க்கிழமை. பக்ரீத்தை ஒட்டி விடுமுறை விடப்பட்டிருந்ததால் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் இயங்கவில்லை. எனவே, பெரும் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது. ஆனாலும் 222 பேர் பலியானார்கள்... 8 பேர் காணாமல் போனார்கள்... 976 பேர் காயமடைந்தார்கள். 

அக்டோபர்  23 

மலேசியாவில், கேமரான் ஹைலேண்டில் அணை ஒன்று திறக்கப்பட்டு நீர் வெளியேறியதில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஒரு இந்தோனேசியப் பெண்மணியும், பங்களாதேஷை சேர்ந்த ஒருவரும், மற்றொரு 17 வயது இந்தோனேசிய சிறுமியும் பலியானார்கள். 80 வீடுகள் முழுவதும் சேதமடைந்தன.

அக்டோபர் 26 

இந்த ஆண்டில் பெய்த மழைகள் ஆந்திராவையும் ஒடிசாவையும் குறிவைத்தே தாக்கின. இந்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 45 பேராவது இறந்து போயிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. வீடுகளோடு, சாலைகளும் மிக மோசமாக இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. 

நவம்பர் 9 

நவம்பர் 3 அன்று உருவான ‘ஹையான்’ புயல், 6 நாட்களுக்குப் பிறகு பிலிப்பைன்சைத் தாக்கியது. இதை ‘வெப்பமண்டலப் புயல்’, ‘உலகின் நான்காவது பெரிய சூறாவளி’ என்றெல்லாம் அறிவியலாளர்கள் வர்ணித்தார்கள். அந்த அசுரன், பிலிப்பைன்சை காற்றாலும் தண்ணீராலும் கதற வைத்தது. 6,129 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. எப்படியும் 10 ஆயிரம் பேர் இறந்திருப்பார்கள் என கருதப்படுகிறது. கடுமையான நிலச்சரிவையும் ஏற்படுத்திவிட்டுப் போயிருந்தது ஹையான். கிட்டத்தட்ட 75 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தார்கள். தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளைத் தாக்கியிருந்தாலும் அதிக பாதிப்புக்குள்ளானது பிலிப்பைன்ஸ்தான். 

நவம்பர் 24

பார்ப்பதற்கு திருவண்ணாமலை தீபம் போலத் தெரிகிற இது எரிமலைதான். ஏட்னா என்கிற இந்த எரிமலை இத்தாலியில் உள்ள சிசிலியில் கிழக்குக் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது. எப்போதும் நெருப்பை தன் வயிற்றிலேயே சுமந்து கொண்டிருக்கும் இந்த எரிமலை, கடைசியாக மிகப் பெரிய அளவில் வெடித்தது 1922ல். இப்போது மறுபடியும் நெருப்பை கக்க ஆரம்பித்திருக்கிறது. 

யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது ஏட்னா. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையும் கூட. கடந்த அக்டோபர் 26ல் வெடித்த ஏட்னா எரிமலை, லேசாக அடங்கி, மறுபடியும் நவம்பர் 24 அன்று நெருப்பை வெளியிட ஆரம்பித்திருக்கிறது. இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. இதில் ஆச்சரியமான விஷயம்... கொஞ்சம் பாதுகாப்பான தூரத்தில் இருந்து கொண்டு, இடம் பெயர்ந்து ஓடாமல் ரசித்துக் கொண்டிருக்கும் மக்கள்! ‘எங்களுக்கு ஏட்னாவைப் பார்த்து பயமில்லை. அதன் அருகாமையில் நாங்கள் இருக்கவே விரும்புகிறோம்’ என்கிறார்கள்.  

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1