திருச்சியில் இருந்து துபாய்க்கு புதிய விமான வழித்தடம் விரைவில் அறிமுகம்!
‘
திருச்சி, நவ.21-
“திருச்சியில் இருந்து துபாய்க்கு விரைவில் புதிய விமான வழித்தடம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பயணநேரம், எரிபொருள் தேவை குறையும்” என்று இந்திய விமான ஆணையத்தின் வாரிய உறுப்பினர் சோமசுந்தரம் கூறினார்.
இந்திய விமான ஆணையத்தின் வாரிய உறுப்பினர் சோமசுந்தரம் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தானியங்கி கண்காணிப்பு கருவி
திருச்சி விமான நிலையத்தில் அதிநவீன தானியங்கி விமான கண்காணிப்பு கருவி (ஏ.டி.எஸ்-பி.) பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கருவி மூலம் திருச்சி, மதுரை விமான நிலையங்கள் உள்பட 300 கி.மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்ட பாதைகளில் விமான வான் வழித்தடங்களை துல்லியமாக கணக்கிட முடியும். அவ்வாறு கணக்கிட்டால், விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்களுக்கு வழித்தடங்களை சிரமமின்றி ஏற்படுத்த முடியும்.
இதனால் சுமார் 10 நிமிட பயண நேரமும், 5 ஆயிரம் கிலோ எடை கொண்ட எரிபொருள் தேவை குறையும். இது தவிர, அதிக அளவில் கரியமில வாயு வெளிப்படுவதும் கட்டுப்படுத்தப்படும். இந்தியா முழுவதும் 21 விமானநிலையங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டு உள்ளது. கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், கோவை ஆகிய விமான நிலையங்களிலும் இந்த கருவி பொருத்தப்பட்டு உள்ளது. ரேடார் வசதி இல்லாத விமானநிலையங்களிலும் இதுபோன்ற நவீன கருவி பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரேடார் கருவி பொருத்த ஏற்படும் செலவை காட்டிலும், இந்த கருவி பொருத்த 10-ல் ஒரு பங்கு மட்டுமே செலவாகிறது.
திருச்சி-துபாய்க்கு புதிய வழித்தடம்
விமானநிலையத்துக்கு செயற்கைகோள் மூலம் துல்லியமாக தகவல்களை பெற ககன் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இந்த திட்டம் குறித்த ஆய்வு அறிக்கையை இந்திய விமானஆணைய தொழில்நுட்ப பிரிவு இயக்குனருக்கு டிசம்பர் இறுதியிலும், 2-ம் கட்ட ஆய்வு அறிக்கையை அடுத்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலையிலும் சமர்ப்பிக்க உள்ளோம்.
இந்த திட்டம் நிறைவேற்றப்படும்போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் விண்ணுக்கு செலுத்திய ஜி-சாட் 8, ஜி-சாட் 10 ரக செயற்கைகோள்கள் மூலம் தகவல்கள் கிடைக்கும். திருச்சியில் இருந்து துபாய்க்கு விரைவில் புதிய விமான வழித்தடம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய வழித்தடத்தால் பயணநேரமும், எரிபொருள் தேவையும் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, விமான கடத்தல் தடுப்புபிரிவு உதவி பொதுமேலாளர் சீனிவாசன் மற்றும் விமானநிலைய அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Category: மாநில செய்தி


0 comments