வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதியை பதிவுசெய்து 5 ஆண்டுகள் முடிவடைந்தவராகவும், 30.9.2008 அன்று அதற்கு முன்னர், பதிவு செய்தவராக இருக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாமல் தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 30.9.2013 தேதியில் 45 வயதைக் கடந்தவராகவும், மற்ற வகுப்பினர்கள் 40 வயதைக் கடந்தவராகவும் இருக்கக் கூடாது. மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருக்கக் கூடாது. ஆனால், தொலைதூரக் கல்வி பயில்பவராக இருக்கலாம். சுயதொழில் மற்றும் சுய சம்பாத்தியம் செய்பவராக இருக்கக் கூடாது.
இந்த தகுதிகளுடைய விண்ணப்பதாரர்களின் நிறைவு செய்த படிவங்கள் 30.11.2013 வரை பெறப்படும். விண்ணப்பப் படிவங்கள் அலுவலக வேலை நாளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பெறப்படும்.
விண்ணப்பப் படிவம் பெற பள்ளி கல்வி, கல்லூரி, மற்றும் மாற்றுச்சான்றிழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் சென்று படிவம் பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஏற்கெனவே உதவித்தொகை பெறுபவர்கள் நிகழாண்டிற்கு சமர்ப்பிக்க வேண்டிய சுய உறுதிமொழி ஆவணத்தை 30.11.2013-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
Category: மாவட்ட செய்தி


0 comments