சுயநிதிக் கல்லூரிகளில் அங்கீகாரமில்லாத படிப்புகள் - பாதிக்கப்படும் மாணவர்கள் ....
தமிழகத்தில்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுமார் 70 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. தற்போது இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கல்லூரியும் அரசின் விதிமுறைகளின்படி கட்டமைப்பு, ஆய்வகம், ஆசிரியர்களின் தகுதிகள் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளதா? என பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் ஆய்வுக்கு பின்னரே செயல்படுகின்றன. அதே போல் கல்லூரிகளில் நடத்தப்படும் ஒவ்வொரு பாடங்களும் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று தான் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) கடந்த 1997ல் கல்லூரிகளில் ஆய்வு செய்த போது இளங்கலை பாடங்கள் மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை தரும் வகையில் இருக்குமாறு மாற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியது.
யுஜிசியின் அறிவுரைப்படி பல்வேறுக் கல்லூரிகள் ஏற்கெனவே பிஏ. ஆங்கிலம் என வழங்கப்பட்ட பாடத்தை பிஏ. தொடர்பியல் ஆங்கிலம், தொழில்சார் ஆங்கிலம் என மாற்றம் செய்தது. அதே போல் பிஏ. பொருளாதாரம் சில கல்லூரிகளில் பிஏ.(பிபிஇ) வணிகவியல் பொருளாதாரம் எனவும், பிஏ. தமிழ் பாடம் தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரம் எனவும், பிகாம் பாடம் பிகாம் சிஏ எனவும், பிஎஸ்சி. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் அப்ளைடு கணிதம், அப்ளைடு வேதியியல், அப்ளைடு இயற்பியல் என மாற்றம் செய்தது. அதே போல் பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி என பாடத்தின் பெயர் மாற்றப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. இப்பிரிவுகள் அனைத்தும் பல்வேறு வேலைவாய்ப்புகளை தரும் எனவும் கல்லூரிகளால் கூறப்பட்டது. இப்பிரிவுகளில் சேருவதற்கு மாணவ, மாணவர்களிடையே கடும் போட்டி நிலவியது. கடந்த 2010ம் ஆண்டு தமிழக அரசால் நடத்தப்பட்ட ஏஇஓ, டிஇடி, டிஆர்பி தேர்வுகளில் இப்படிப்புகளை படித்தவர்கள் ஏராளமானவர்கள் வெற்றி பெற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இளங்கலை படிப்பை ஏற்றுக் கொள்ள அரசாணை இல்லை எனக்கூறி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்தது.
மாணவர்கள் படித்த கல்லூரிகளை முற்றுகையிட்டு கடந்த 2012 நவம்பரில் இருந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். பல்கலைக்கழகங்கள் இப்படிப்புகளை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. இப்படிப்புகள் அனைத்தும் பல்கலைக்கழக ரேட்டிங்கில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளன. இருந்த போதும் தமிழக அரசின் அரசாணை இருந்தால் மட்டுமே ஏற்க முடியும் எனக்கூறி டிஆர்பி மறுத்தது. தமிழக அரசின் அரசாணை பெற்ற பின்னரும் டிஆர்பி ஏற்கவில்லை. இப்பிரச்னையில் கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட படிப்புகளுக்கு அரசாணை பெற்று தந்து விட்டோம். புதிய படிப்புகளுக்கு அங்கீகாரம், அனுமதி போன்ற விஷயங்களில் பல்கலைக்கழகங்கள் தான் முடிவெடுக்க முடியும் என கைவிரித்து விட்டனர். மாற்றம் செய்யப்பட்ட பாடங்களில் படித்து வெற்றி பெற்ற 520 பேர் சேர்ந்து மதுரை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் 2013 பிப்ரவரியில் இரண்டு வாரங்களுக்குள் பணி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இருந்தும் தற்போது வரை வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்பட வில்லை.
கம்யூனிகேடிவ் ஆங்கிலம் படித்து டிஆர்பி, ஏஇஓ மற்றும் டிஇடி தேர்வுகளில் வெற்றி பெற்ற முத்துபிரியா கூறும் போது �கடந்த 2010ம் ஆண்டுக்கு முன்னர் இதே பிரிவில் படித்து வெற்றி பெற்றவர்கள் தற்போது பணியில் உள்ளனர். நாங்கள் அரசாணை பெற்றும், உயர்நீதிமன்ற உத்தரவு பெற்றும் பணி வழங்கப்படவில்லை. இது குறித்து டிஆர்பி தலைவரை நேரில் சந்தித்து பணி வழங்க வலியுறுத்திய போது கூட உங்கள் அரசாணையை ஏற்றுக் கொள்கிறோம். தற்போது நடத்தப்பட இருக்கின்ற டிஇடி, டிஆர்பி தேர்வுகளை மீண்டும் எழுதி வெற்றி பெறுங்கள். பணி வழங்கப்படும் என்கிறார். அப்போது ஏற்கனவே எழுதி வெற்றி பெற்றது பொய்யா? ஒருமுறை போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதே கடினமான விஷயம். கடந்த 2010ல் டிஇடி.தேர்வில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி பெற்றிருந்தனர். அதில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். அப்படியிருந்தும் பணி கிடைக்கவில்லை. மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். காலநேரம், பொருளாதார விரயம் என பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளோம்.
மத்திய அரசின் யுஜிசி அறிவுரைப்படி புதிய படிப்புகள் துவங்கப்பட்டுள்ளது. இதனை அரசின் பல்கலைக்கழகங்கள் அங்கீகரித்துள்ளன. பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் தான் 520 பேரும் படித்து வெற்றி பெற்றுள்ளோம். தமிழக அரசின் அரசாணை இருந்தும் பணி வழங்க வில்லை. நீதிமன்ற உத்தரவும் ஏற்கப்பட வில்லை. அரசின் உத்தரவை அரசு அதிகாரிகளே ஏற்க மறுக்கின்றனர். பல்வேறு முரண்பாடுகள் நிர்வாகத்தில் உள்ளது. தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறோம்� என்றார்.
கடந்த 10 ஆண்டுக்குள் பெரும்பாலான பாடப்பிரிவுகளில் பி.காம் வித் சிஏ, பிஎஸ்சி. கணிதம் வித் சிஏ. என வந்துள்ளது. முதுகலை படிப்பில் சேரும் போது எம்எஸ்சி கணிதம் வித் சிஏ, எம்.காம். வித் சிஏ, இருப்பது இல்லை. இப்படிப்பிற்காக பல்கலைக்கழகத்தில் இணையான படிப்பு என சான்றிதழ் வாங்கி வர சொல்கின்றனர். இதனால் முதுகலையில் சேர காலதாமதம் ஏற்படுகிறது. கல்லூரிகளே முழு பொறுப்பெடுத்து இணையான சான்றிதழ், அரசாணை பெற்றுத்தர வேண்டும். தற்போது புற்றீசல் போல் சுயநிதிக்கல்லூரிகள் பெருகி விட்டன. இங்கு மாணவர்களைக் கவர ஏராளமான புதிய, புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. கட்டணமும் ஆயிரக்கணக்கில் வசூலிக்கப்படுகின்றன. பல்கலைக்கழகங்களும் புதிய, புதிய படிப்புகளுக்கு அங்கீகாரம் அளித்த வண்ணம் உள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனக்கு கீழ் செயல்படும் கல்லூரிகள், அங்கு நடத்தப்படும் பாடங்களின் விவரங்கள், அதற்கு பல்கலைக்கழகம் வழங்கியுள்ள ரேட்டிங்கை வெளியிட வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற பாடப்பிரிவை மாற்றம் செய்யும் போது கல்லூரிகள் அரசாணை பெறுவது அவசியம். இதனை பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்து உறுதிபடுத்த வேண்டும். புதிய பாடங்களுக்கு பல்கலைக்கழக அங்கீகாரம் பெறுவதற்கு முன்னரே கல்லூரிகள் * சப்ஜெட் டூ அப்ரூவல் என அச்சிட்டு விண்ணப்பங்களை வழங்குகின்றனர்.
டிஆர்பி 60 பாடங்களை அங்கீகரித்து வெளியிட்டுள்ளது. இப்பாடங்களை படித்தவர்கள் மட்டுமே ஆசிரியர் தேர்வு எழுத முடியும். இளங்கலை சேருவதற்கு முன்னர் மாணவர்கள் சேர இருக்கும் பாடம் அங்கீகரிக்கப்பட்டதா? மாற்றம் செய்யப்பட்ட படிப்பானால் அரசாணை பெறப்பட்டுள்ளதா? மேற்படிப்புக்கான வாய்ப்புகள் என்ன? எம்மாதிரியான போட்டித்தேர்வுகளை எழுத இயலும்? டிஆர்பி பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என அனைத்தையும் தெரிந்து கொள்வது அவசியம். அப்போது தான் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் விவரம் வெப்சைட்டில் உள்ளது
மதுரை காமராஜ் பல்கலைக்கழக உயரதிகாரி ஒருவர் கூறும் போது �வரும் கல்வியாண்டில் புதிதாக ஒரு பாடம் கொண்டு வர கல்லூரி விரும்பினால் நடப்பு ஆண்டு செப்டம்பருக்குள்ளேயே பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு புதிய படிப்பிற்கான புத்தகங்கள், ஆசிரியர்கள், ஆய்வகம், கட்டமைப்பு உட்பட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து சிண்டிகேட் கூட்டத்தில் வைக்கப்படும். உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்ட பின்னர் அங்கீகாரம் வழங்கப்படும். பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும். அங்கீகாரம் இல்லாமல் எந்த படிப்பும் நடத்த முடியாது என்றார்.
அங்கீகாரம் பெறுவதற்கு மேற்கோள் புத்தகம் அவசியம்
அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கூறும் போது �இந்தாண்டு எங்கள் கல்லூரியில் பிஎஸ்சி. மைக்ரோ பயாலஜி பாடம் துவக்கியுள்ளோம். பாடம் நடத்த அனுமதிக்காக கடந்த ஆண்டு விண்ணப்பித்தோம். ஆய்வகம், ஆசிரியர் தகுதி, கட்டமைப்பு தவிர பாடத்திட்டத்தில் கூறியுள்ளபடி ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தது 7 முதல் 10 மேற்கோள்(ரெபரன்ஸ்) புத்தகம் இருக்க வேண்டும். இவையனைத்தும் இருந்தால் மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் என்றார்.
THANKS :
ஆர்.ஜெயலெட்சுமி,
ஆர்.ஜெயலெட்சுமி,
Category: உயர் கல்வி


0 comments