பெரம்பலூர் மாவட்டத்தில் 9 பள்ளிகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 23 பள்ளிகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து பெரம்பலூர் ஆட்சியர் தரேஸ் அஹமது செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூரில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமையில், 8 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டது.
இந்த ஆய்வுகளில் பள்ளிகளில் கட்டட உரிமைச் சான்று, கட்டட உறுதிச் சான்று, சுகாதார சான்று, தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்று பெற்றுள்ளனரா, பள்ளியின் கழிப்பிட, குடிநீர், இட வசதி, விளையாட்டு திடல், போதுமான இருப்பிட வசதி உள்ளதா என்று அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், பெரம்பலூர் வட்டாரத்திற்குள்பட்ட பெரம்பலூர் - எளம்பலூர் சாலையில் செயல்பட்டு வரும் ரோஸ் கிட்ஸ் கார்டன் நர்சரி பள்ளி, ஆத்தூர் சாலையில் செயல்பட்டு வரும் சக்ஸஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சாமியப்பா நகரில் செயல்பட்டு வரும் கலீல் மழலையர் பள்ளி, சென்னை பிரதான சாலையில் உள்ள இந்திரா நகர் தண்ணீர் பந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் நர்சரி மற்றும் தொடக்கபள்ளி, பெரம்பலூர் பர்ஸ்ட் ஸ்கூல் மழலையர் பள்ளி, ஆலத்தூர் வட்டாரத்திற்குள்பட்ட மேலமாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ரவி மழலையர் மற்றும் தொடக்கபள்ளி, இரூர் பகுதியில் செயல்பட்டு வரும் சரஸ்வதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, செட்டிக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீராமகிருஷ்ணா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, வேப்பூர் வட்டாரத்திற்குள்பட்ட ஆய்க்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் சத்தியபாமா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய 9 பள்ளிகள் அரசின் வழிகாட்டுதலின்படி தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்கள் பெறாததாலும், தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும் மேற்கண்ட 9 பள்ளிகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளன என்றார்
Category: மாவட்ட செய்தி

0 comments