பெரம்பலூரில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு விண்ணப்பம் விநியோகம். கவுன்சலிங் ஜூன் 21ம் தேதி தொடங்கும்.
பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில், பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு விண்ணப்பம் விநியோகம் சனிக்கிழமை தொடங்கியது.
பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் மே 4-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விநியோகிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் வழங்கப்பட்டு வருகிறது. முதல் விண்ணப்ப விநியோகத்தை தொடக்கிவைத்து பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்பிரமணியம் பேசியது: விண்ணப்பங்கள் மே 4-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ. 500, எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் ஜெராக்ஸ் நகல் கொண்டு வரும் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 250-ம் வசூலிக்கப்படுகிறது.
நாள்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். கட்டணத்தை டி.டி அல்லது ரொக்கமாக செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். டி.டி மூலம் பெற விரும்புவோர் தி செக்ரட்ரி தமிழ்நாடு இன்ஜினியரிங் அட்மிசன்ஸ் (டி.என்.இ.ஏ) என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுத்துக்கொடுத்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 5-ம் தேதி ரேண்டம் எண் வெளியீடும், 12-ம் தேதி ரேங்க் பட்டியலும் வெளியிடப்படும். ஜூன் 21-ம் தேதி முதல் ஜூலை 30-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். ஆக. 1-ம் தேதி முதல் கல்லூரி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்றார் அவர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் எம்.எஸ். விவேகானந்தன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
இதேபோல, அரியலூர் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் சனிக்கிழமை தொடங்கியது. இதில் 357 பொது பிரிவினருக்கான விண்ணப்பங்களும், 50 தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினருக்கான
விண்ணப்பங்களும் என 407 விண்ணப்பங்கள் விற்பனையாகின.
பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் ஜூன் 21ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பிஇ, பிடெக் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 59 மையங்களில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி மாலை 5.30 மணி வரை வழங்கப்படும். கடந்த ஆண்டு 2.25 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாயின. எனினும், 1.70 லட்சம் இடங்களிலேயே மாணவர்கள் சேர்ந்தனர். சுமார் 40 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு 2.50 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 2 லட்சம் இடங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கிறோம். பிளஸ் 1 படிக்கும் போதே பள்ளிகளில் பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதனால் மாணவர்கள் கணித பாடத்தில் தேர்ச்சி பெற மிகவும் சிரமப்படுகின்றனர். கணிதத்தில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால், பொறியியல் சேர்க்கை மற்றும் படிப்புகளில் சிரமப்படுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்ணும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் 40 சதவீத மதிப்பெண்ணும், தாழ்த்தப்பட்டோர், அருந்ததியினர், பழங்குடியினர் 35 சதவீத மதிப்பெண்ணும் எடுத்திருந்தால் விண்ணப்பிக்கலாம். தற்போது சிவில் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழக முழுவதும் அடிப்படை கட்டமைப்பை பூர்த்தி செய்யாத 200 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்வார்கள் அதன் அடிப்படையில் கட்டமைப்பு இல்லாத இன்ஜினியரிங் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் வரும் ஜூன் 21ம் தேதி தொடங்கி ஜூலை 30ம் வரை நடக்கும். ஆகஸ்ட் 1ம் தேதி கல்லூரிகள் தொடங்கும்.
Category: உயர் கல்வி

0 comments