பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது!
குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு வகுப்புகளை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்த ஆட்சியர் பேசியது: பெரம்பலூர் மாவட்டம், கல்வி வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வரால் கடந்த ஆண்டு வேப்பூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியும், நிகழாண்டு வேப்பந்தட்டையில் அரசு கலைக் கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பள்ளி படிப்பை முடித்துவிட்டு முதல் முறையாக கல்லூரிக்கு வந்துள்ள மாணவர்கள் கல்வி அறிவோடு, உலக அறிவையும் வளர்த்து கொள்வது அவசியமாகும்.
மேலும், மத்திய, மாநில அரசு மூலம் நடத்தப்பட்டு வரும் போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வரும் பயிற்சி வகுப்பைபோல, கல்லூரியிலும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த முன்வர வேண்டும் என்றார் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்செல்வன் பேசியது:
வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மற்றும் வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரிகள் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் தங்களது கல்லூரி படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது. கல்லூரியின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து விளையாட்டு மைதானம் அமைக்க ரூ. 4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் அவர்.
Category: மாவட்ட செய்தி
0 comments