மோனோ ரயில் திட்டம் ஆராயும் பணி தொடங்கியது!!
கடந்த 2001-2006 ஆட்சிக்காலத்திலேயே மோனோ ரயிலை சென்னைக்கு கொண்டு வர அப்போதைய அதிமுக அரசு திட்டமிட்டது. ஆனால், உயர்நீதிமன்றத்தில் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதால் இத்திட்டம் தாமதமானது. இதற்கிடையே ஆட்சி மாறியது. மோனோ ரயில் திட்டத்துக்கு பதில் மெட்ரோ ரயில் திட்டம் அமலாகத் தொடங்கியது.
கடந்த 2011-ம் ஆண்டில் அதிமுக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றவுடன் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக்குறைக்க 300 கி.மீ. தூரத்துக்கு மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டது. கோவை, மதுரை, திருச்சி மாநகராட்சிகளி்லும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மோனோ ரயில்களை இயக்குவது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மெட்ரோ ரயிலை விட செலவு குறைவு, கட்டுமானப் பணிக்கான காலம் குறைவு என்பன உள்ளிட்ட பல்வேறு மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்தத் திட்டமிடுவதாக கவர்னர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், பல்வேறு காரணங்களால் சென்னையில் மோனோ ரயில் கட்டுமானப் பணிகளை செய்வதற்கான தனியார் நிறுவனத்தை தேர்ந் தெடுப்பதற்கான டெண்டர்களை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அத்திட்டத்தினை துரிதப்படுத்த தமிழக அரசு தற்போது தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ஜூனில் உறுதியான முடிவெடுக்கப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து, கோவையில் மோனோ ரயிலைக் கொண்டுவரும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. மோனோ ரயில் திட்டத்தை அங்கு செயல்படுத்துவதற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையை போல் திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங் களில் மோனோ ரயில் திட்டத்தை தொடங்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.
சென்னை பிரச்சினை முடிவடைந்துள்ள நிலை யில், கோவையில் மோனோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்து வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன.
கோவையில் அதை செயல் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான ஆய் வறிக்கையை தயாரிக்கும் பொறுப்பு, தமிழக போக்குவரத்துத் துறையின் அங்கமான சாலை போக்குவரத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவர்கள், கோவைக்கு நேரில் சென்று அங்குள்ள வாகனப் போக்குவரத்து விவரம் மற்றும் நெரிசலான வழித்தடங்கள் போன்ற பல்வேறு அம்சங்களைப் பற்றி ஆய்வு மேற்கொள்வார்கள். அவர்கள் இது பற்றிய அறிக்கையை தயாரித்து அரசுக்குத் தந்தபிறகு அங்கு எத்தனை வழித்தடங்களில் மோனோ ரயில்களை விடலாம் என்று முடிவெடுக்கப்படும்.
பின்னர் அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டர் விடப்படும். அடுத்த கட்டமாக, திருச்சி, மதுரை பற்றி முடிவெடுக்கப்படும். கோவை நகரத்துக்கு, சாலை போக்குவரத்து நிறுவனத்தின் கூடுதல் இயக்குனர் தலைமையிலான குழு விரைவில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Category: மாவட்ட செய்தி
0 comments