பொறியியல் விண்ணப்பம் பெறுதல் மற்றும் சமர்ப்பித்தலுக்கான கடைசித் தேதி மே 27!
மே மாதம் 3ம் தேதி முதல் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப விற்பனையை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியது. வெளியூர் மாணவர்கள், சென்னைக்கு அலையாமல், அந்தந்த மாவட்டங்களிலேயே விண்ணப்பங்களை பெறும் வகையில் விற்பனை மையங்கள், அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்டன.
முதல் நாளில் 70 ஆயிரத்து 212 விண்ணப்பங்கள் விற்பனையாகின. ஆனால் அந்த விற்பனை எண்ணிக்கை, அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக குறைந்தது. முதல் நாளில் 70 ஆயிரத்தை தாண்டிய விண்ணப்ப விற்பனை, நாட்கள் செல்ல 1,000 மற்றும் 2,000 என்ற அளவிற்கு சுருங்கியது.
மே 17ம் தேதி, மாலை 5 மணி வரையிலான நிலவரப்படி, ஒட்டுமொத்த விண்ணப்ப விற்பனை 2 லட்சத்து 2 ஆயிரத்து 806 என்ற அளவில் உள்ளது.
இதற்கு முன்பு, விண்ணப்பங்களை விற்பனை செய்யும் மற்றும் சமர்ப்பிக்கும் கடைசித் தேதி மே 20 என்பதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அது 7 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநில வாரியத்தில் படித்த பல மாணவர்களுக்கு, முதல் தலைமுறை பட்டதாரி உள்ளிட்ட பல சான்றிதழ்களை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. தேர்தல் பணிகளே இதற்கு பிரதான காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, அத்தகைய மாணவர்கள் பயன்பெறும் வகையில் தேதி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், CBSE பிரிவில் படித்த மாணவர்களுக்கு இன்னும் பிளஸ் 2 முடிவுகள் வெளிவரவில்லை. இதனால், பொறியியல் ஆர்வமுள்ள அந்த வாரிய மாணவர்கள் பெரிதும் கவலையடைந்தனர். ஆனாலும், CBSE மாணவர்கள் மதிப்பெண் விபரங்கள் இல்லாமல், பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலை அறிவித்தது.
தற்போது, விண்ணப்ப விற்பனை மற்றும் சமர்ப்பித்தலுக்கான தேதி நீட்டிப்பு வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலமாக, CBSE மாணவர்கள் நிம்மதியடைந்துள்ளனர். ஏனெனில், அவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 25ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்ப விற்பனை கூடுதலாக 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், கூடுதலாக இன்னும் சில ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மே 27ம் தேதி, மாலை 6 மணிக்குள் சமர்ப்பித்துவிட வேண்டும். விண்ணப்பங்கள், அதே தேதியில் மாலை 5.30 மணிவரை வழங்கப்படும்.
Category: உயர் கல்வி
0 comments