மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக: சென்னையில் மேலும் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி 2015–16 கல்வியாண்டில் மாணவர்களை சேர்க்க திட்டம்
மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், மருத்துவத்தின் தரத்தை உயர்த்துவதற்காக சென்னையில் மேலும் ஒரு மருத்துவ கல்லூரி கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது, முறையான அனுமதியை பெற்று 2015–16–ம் கல்வியாண்டில் இங்கு 100 மாணவர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் முதல் இடம்
சென்னையில் மெட்ராஸ் மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி ஆகிய 3 மருத்துவ கல்லூரிகள் உட்பட தமிழகத்தில் 19 அரசு மருத்துவக்கல்லூரிகளும், 11 தனியார் மருத்துவ கல்லூரிகளும், சென்னையில் 1 இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன.
மக்கள் தொகைக்கு ஏற்றார் போன்று போதிய டாக்டர்களின் எண்ணிக்கை இல்லை என்பதாலும், சுகாதார வசதியை பிறமாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் முதல் இடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதாலும் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மருத்துவ சுற்றுலா அதிகரிப்பு
நாட்டிலேயே பிறமாநிலங்களிலிருந்து வி.ஐ.பி.க்கள் மட்டுமல்லாது சாதாரண மாணவர்களும், பிறநாட்டை சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் சிகிச்சை பெற வருகின்றனர். இதனால் தமிழகத்தில் மருத்துவ சுற்றுலா (மெடிக்கல் டூரிசம்) அதிகரித்துள்ளது.
இதனை மேலும் வலுசேர்க்கும் வகையில் மருத்துவ கல்லூரிகளை அதிகம் தொடங்கி அதிக மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு அதிக எண்ணிக்கையில் மருத்துவ கல்லூரிகளை தொடங்கி வருகிறது.
கடந்த ஆண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியை கட்டி முடித்து, ஒரே ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதியை பெற்று, அதே ஆண்டிலேயே மாணவர்கள் சேர்க்கையையும் செய்து தமிழக அரசு சாதனை படைத்தது.
தொடர்ந்து மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், மருத்துவத்தின் தரத்தையும் அதிகரிப்பதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் அரசு மருத்துவக்கல்லூரிகளை தொடங்க அதிக முனைப்பு காட்டி வருகிறது. இதனால் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகளும் மாணவர்களுக்கு அதிகரித்து வருகிறது.
புதிய அரசு மருத்துவ கல்லூரி
அந்தவகையில் சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் ஏ–பிளாக் ஆக 60 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.143.14 கோடி செலவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் காலியாக உள்ள பகுதியில் பி–பிளாக்கில் ரூ.200 கோடி மதிப்பில் 580 படுக்கைகளுடன் அடங்கிய ‘‘புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை’’ ஒன்றை தமிழக அரசு உத்தரவை ஏற்று பொதுப்பணித்துறையின் கட்டிடப்பிரிவின் மேற்பார்வையில் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. தரைதளத்துடன் கூடிய 7 மாடிகளுடன் கூடிய 7 கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது.
இதில் 1, 2 மற்றும் 3–வது பிளாக்குகள் மருத்துவமனையாகவும், 4 மற்றும் 5–வது பிளாக்குகள் மருத்துவக்கல்லூரியாகவும், 6 மற்றும் 7–வது பிளாக்குகள் மாணவர்கள் தங்கும் விடுதி, நர்ச் விடுதி, மருத்துவர்கள் குடியிருப்பு போன்றவை கட்டப்பட்டு வருகிறது. இதில் 4, 5, 6 மற்றும் 7–வது பிளாக்குகளின் கட்டுமானப்பணிகள் முடிவடைந்துள்ளன. 1, 2 மற்றும் 3–வது பிளாக்குகளுக்கான கட்டிடங்கள் 4–வது மாடி வரை கட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:–
கட்டுமானப்பணிகள்
தமிழக அரசின் உத்தரவை ஏற்று புதிய அரசு மருத்துவக்கல்லூரிக்கான கட்டுமானப்பணிகள் தரமான முறையில் நடந்து வருகிறது. மருத்துவ துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று இந்த கல்லூரியின் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. 3 பிளாக்குள் தவிர மற்ற அனைத்து பிளாக்குகளும் கட்டுமானப்பணிகள் முடிவடைந்துவிட்டது. மீதம் உள்ள பணிகளை விரைந்து முடித்து 2015–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணிகளை முடித்து கட்டிடத்தை ஒப்படைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–
சென்னை வாலாஜா சாலையில் கட்டப்படும் புதிய மருத்துவ கல்லூரி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த உடன், இந்திய மருத்துவ கவுன்சிலிடம் முறையான அனுமதியை பெற்று 2015–16–ம் ஆண்டு முதல் கட்டமாக 100 மாணவர்கள் சேர்க்கை திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவம் படிப்பவர்களின் எண்ணிக்கையும் அடுத்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Category: உயர் கல்வி
0 comments